முதியோர் ஓய்வூதியத் திட்டம் யாருக்கு பயன்படுகிறது? 


கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகாவில் உள்ள 38 வருவாய் கிராமங்களில் 50 சதவிகிதம் பேர் போலி சான்றிதழ் தந்து, லஞ்சம் அளித்து அரசின் உதவித்தொகைகளை பெற்று வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. ஆனால், தகுதி உடைய முதியோருக்கு உதவித்தொகை மறுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
புதிய தலைமுறை கள ஆய்வு:
தொடர் புகார்களை அடுத்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில், வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில், பள்ளி மாணவிகளுக்கு கூட முதியோர் உதவித்தொகை வழங்கப்படுவது தெரிய வந்தது.
இது குறித்து கள ஆய்வு செய்தது புதிய தலைமுறை.
தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுவோர் பட்டியல் பெற்ற நமது புதிய தலைமுறை செய்தியாளர் பழனிவேல், நேரடியாக சென்று பயனாளிகளை சந்திக்கச்சென்றபோது மேலும் பல முறைகேடுகள் வெளிவந்தன.
திம்மிநாயக்கன்பட்டி வருவாய் கிராமத்தில் மட்டுமே 311 பேர் முறைகேடாக உதவித்தொகை பெறுவது தெரியவந்ததையடுத்து, தற்போது, உதவித்தொகை வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
311 பேருக்கும் உதவித்தொகையை மாவட்ட நிர்வாகம் ரத்து செய்துள்ளது. இதேபோல மற்ற வருவாய் கிராமங்களிலும் ஆய்வு செய்ய வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
முதியோர் ஓய்வூதியத் திட்டம் பலனளிக்கிறதா?
முதியோர் ஓய்வூதியத் திட்டம் கொண்டுவரப்பட்ட காலத்தில் 75 ரூபாயாக மாத ஓய்வூதியம் இருந்தது. படிப்படியாக உயர்ந்து தற்போது அதிமுக ஆட்சிக்காலத்தில் ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்த பலன் முதியோருக்கு கிடைக்கிறதா?

சேலம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஜலால் மொய்தீன் என்ற தனி தாசில்தார் செய்த முறைகேட்டால், இவர் உத்தரவிட்ட 8819 ஆணைகளும் ரத்து செய்யப்பட்டன. இதனால் முதியோருக்கு கிடைத்துவந்த உதவித்தொகையும் தடைபட்டுள்ளது.
இதேநிலைதான் நாமக்கல்லிலும், உதவித்தொகை பெறுவதற்கான தகுதிகள் இருந்தும் கிடைக்கவில்லை என்கிறார் ஒரு முதிய பெண்மணி.
எருமப்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட பொட்டி ரெட்டிப்பட்டியை சேர்ந்த இவரைப்போல இன்னமும் பலர் அதிகாரிகளின் அலட்சியத்தை புகாராக கூறுகிறார்கள்.
இதேபோல, தேனி மாவட்டம் சின்னமனூரைச் சேர்ந்த மருதமுத்து, ராமுதாய் தம்பதியினரும் உத்தம பாளையம் பகுதிக்குச்சென்று உதவித்தொகைக்காக விண்ணப்பித்தார். ஆனால் 2 ஆயிரம் ரூபாய் பணம் தந்தால் மட்டுமே உதவித்தொகை வழங்கப்படும் என்று அதிகாரிகள் கூறிவிட்டதாக அவர்கள் வருந்துகிறார்கள்.

சமூக பாதுகாப்பு ஓய்வூதியத் திட்ட சலுகைகள்
சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் தமிழக அரசு அளித்துவரும் உதவிகள் மற்ற எந்த மாநிலத்தை காட்டிலும் மிகவும் அதிகமானது. ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் ஒரு லட்சம் பேர் பயன்பெற்று வருகிறார்கள்.
தமிழகத்தில் இத்திட்டத்தின் கீழ் 30 லட்சத்து 71 ஆயிரத்து 984 பேருக்கு மாத உதவித்தொகை வழங்கப் படுகிறது.
50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான முதியோர் உதவித்தொகையை 13 லட்சத்து 40 ஆயிரத்து 154 பேர் பெறுகிறார்கள்.
இதேபோல, மாற்றுத் திறனாளிகள், கணவனை இழந்தவர்கள், கணவனை பிரிந்து வாழ்பவர்கள், திருமணமாகாத 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் என மொத்தம் 8 வகையானவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.
இதில் மத்திய அரசின் பங்கு 200 ரூபாய். மாநில அரசு தன் பங்காக 800 ரூபாய் வழங்குகிறது. அதுமட்டுமின்றி, பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகைக்காலங்களில் இவர்களுக்கு இலவச வேட்டிச்சேலை, மாதந்தோறும் 4 கிலோ அரசி போன்ற சலுகைகளும் இருக்கின்றன.
நன்றி puthiyathalaimurai